சரியான ஆண்மகனாக இருந்தால் தேர்தலில் பெரியார் பெயரைச் சொல்லி, பெரியார் கொள்கைகளை சொல்லி ஓட்டு கேளுங்கள் பார்க்கலாம் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் சவால் விடுத்துள்ளார்.
காந்தி படம் போட்ட பணம் கொடுத்து வாக்கு கேட்கும் உங்களுக்கு பெரியார் தலைவர் இல்லை, உங்கள் தலைவர் உண்மையில் காந்தி தான். 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் சரியான ஆண்மகனாக இருந்தால் பெரியார் பெரும் தலைவர் என்று சொல்லி வாக்கு கேளுங்கள் பார்க்கலாம் என்று அவர் தெரிவித்தார்.
தீரன் சின்னமலை, கொடிகாத்த குமரன், பொன் சங்கர், காளிங்கராயன் வாழ்ந்த மண் இது. அவர்களின் வாரிசுகள் நாங்கள், அப்படி இருக்கும் நிலையில் பெரியார் பேசியது எழுதியது எந்த மொழி என்பதற்கு பதில் இருக்கிறதா? பெரியார் எந்த சமூகத்திற்கு தொண்டாற்றினார்?
திடீரென கிளம்பும் பெரியார் பக்தர்கள் இதைப் போல மேடை போட்டு பெரியார் கற்றுத் தந்ததை, பெற்று தந்த சமூக நீதி என்ன என்று பேசுங்கள் பார்க்கலாம். அப்படி மேடை போட்டு பேசுபவர்கள் பெரியார் பேசியதை பேச முடியுமா? பெரியார் புகழ் பாடுபவர்கள் பெரியார் படத்தை காண்பித்து ஓட்டு கேட்க முடியுமா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
ஏற்கனவே பெரியார் குறித்து சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் தற்போது மீண்டும் பெரியார் குறித்து ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.