இன்று காணும் பொங்கல் கொண்டாடப்பட இருப்பதை அடுத்து, சென்னை மெரினாவில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களை கணக்கில் கொண்டு, சென்னை மெரினாவில் குளிக்க தடை என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
மேலும், சென்னை மெரினாவுக்கு வருபவர்கள் கடற்கரையில் கடலில் இறங்காமல் தடுக்க கட்டைகள் அமைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பொதுமக்களின் வசதிக்காக 127 சிறப்பு கழிவறைகள் ஆறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய 2000 லிட்டர் குடிநீர் ஆறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், காணும் பொங்கலுக்கு மெரினாவுக்கு வரும் குழந்தைகள் காணாமல் போவதை தடுக்கும் வகையில், அல்லது காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்கும் வகையில், மாநகர காவல் துறை சார்பாக, குழந்தைகளின் கையில் கைப்பட்டைகள் போலீசார் கட்டி விட திட்டமிட்டுள்ளனர்.
மேலும், 12 இடங்களில் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, போலீசார் அதனை கண்காணித்து வருவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.