அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், வரும் செப்டம்பர் 5ஆம் தேதி நடத்தவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக முன்னாள் எம்.பி. சத்தியபாமா தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில் ஜெயலலிதாவின் படம் இடம்பெறாதது செங்கோட்டையனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த அதிருப்தியை தொடர்ந்து, அவர் டெல்லி சென்று பா.ஜ.க. தலைவர்களை சந்தித்தது அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளரான சத்தியபாமா, சமீபத்தில் நடந்த அவரது ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து பல்வேறு யூகங்கள் எழுந்தன. ஆனால், உடல்நலக்குறைவு காரணமாகவே தான் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று சத்தியபாமா விளக்கமளித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று செங்கோட்டையனை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சத்தியபாமா, "செங்கோட்டையன் நல்ல முடிவை எடுப்பார். அ.தி.மு.க. 2026-ல் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே நோக்கம். செப்டம்பர் 5ஆம் தேதி அவர் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் நிச்சயம் பங்கேற்பேன்" என்று உறுதிபட தெரிவித்தார்.
செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் இந்த அடுத்தகட்ட நகர்வுகள், அ.தி.மு.க.வில் தற்போது நிலவி வரும் உட்கட்சி பூசல்களை மேலும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக உள்ளது.