தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வேளச்சேரியில் வாக்குப்பதிவு எந்திரம் மோட்டார் சைக்கிளில் எடுத்து செல்லப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று ஒரே கட்டமாக முடிவடைந்த நிலையில் வாக்குச்சாவடிகளிலிருந்து வாக்குப்பெட்டிகள் பத்திரமாக கொண்டு செல்லப்பட்டு வாக்கு எண்ணும் கூடங்களில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் வாக்கு எந்திரம் உள்ள கூடங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேளச்சேரியில் இருவர் வாக்கு எந்திரங்களை பைக்கில் கொண்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களை மக்கள் மடக்கி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். விசாரணையில் அவர்கள் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் என தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு “அவௌ வாக்களிக்கப்பட்ட வாக்கு எந்திரம் அல்ல என தெரிய வந்துள்ளது. இந்த தவறை மாவட்ட தேர்தல் அதிகாரியின் கீழ் பணிபுரிந்த இருவர் செய்ததாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.