அ.தி.மு.க.வின் மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன், தி.மு.க. அரசின் சுகாதாரத் துறை செயல்பாடுகள் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அ.தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளையும், தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்ட பின்னடைவுகளையும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
டாக்டர் சரவணன் தனது அறிக்கையில், "அ.தி.மு.க. ஆட்சியில், ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 600 மாணவர்கள் மருத்துவப் படிப்பு பெற வழிவகை செய்யப்பட்டது. இது எடப்பாடி பழனிசாமியின் சிறந்த ஆட்சிக்கு ஒரு சான்றாகும்" என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், தி.மு.க.வின் 53 மாத ஆட்சி காலத்தில், ஒரு மருத்துவ கல்லூரிகூட புதிதாக உருவாகவில்லை என்று சரவணன் விமர்சித்துள்ளார். மேலும், "இந்தியா முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 6,850 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், தி.மு.க. முதலமைச்சர் ஸ்டாலினால் தமிழகத்திற்கு ஒரு மருத்துவப் படிப்பு இடம்கூட பெற முடியவில்லை. இது, சுகாதாரத் துறை செயல்பாட்டில் தமிழக அரசு முற்றிலும் தோல்வியடைந்து விட்டதையே காட்டுகிறது" என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.