Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முன்னாள் சட்ட அமைச்சருக்கு இதுகூட தெரியாதா? ஜெயகுமார் குறித்து ஆர்.எஸ்.பாரதி

முன்னாள் சட்ட அமைச்சருக்கு இதுகூட தெரியாதா? ஜெயகுமார் குறித்து ஆர்.எஸ்.பாரதி
, திங்கள், 14 மார்ச் 2022 (14:52 IST)
ஒருவர் மீது குற்றச்சாட்டு ஏற்பட்டால் அதனை நீதிமன்றத்தில் தான் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டுமே தவிர பத்திரிகையில் பேட்டி வாயிலாக அல்ல என ஜெயக்குமார் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
 
 
சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு- அராஜகமாகச் செயல்பட்டு- ஏதோ தானே ஒரு சினிமா போலீஸ் அதிகாரிபோல் நினைத்துக்கொண்டு - தி.மு.க. தொண்டரை இழிவாக நடத்திய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆணவச் செயலை அனைத்து ஊடகங்களும் காட்சிப்படுத்திய பிறகும் கூட, “அ.தி.மு.க.வை எச்சரிப்பதற்காக என்னைக் கைது செய்திருக்கிறார்கள். என் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை” என அவர் வழக்கம்போல் அபாண்டமாகப் புளுகியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
 
எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் அர்த்தமற்ற அவதூறுகளைப் புறந்தள்ளி, ஆக்கப்பூர்வமான கருத்துகள் இருந்தால் அவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து - காது கொடுத்துக் கேட்கும் ஒரு முதலமைச்சரைத் தமிழ்நாடு பெற்றிருப்பதை ஜெயக்குமாரால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.
 
“நில அபகரிப்பு” “பொது வெளியில் அராஜகம்” “கொலை முயற்சி வழக்கு” உள்ளிட்ட புகார்களுக்குத் ஜெயக்குமார் நீதிமன்றத்தில்தான் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டுமே தவிர- இப்படி பத்திரிகைப் பேட்டிகள் வாயிலாக அல்ல.
 
சட்ட அமைச்சராக இருந்தவருக்குச் சட்டத்தின் அரிச்சுவடியைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டு விட்டதே என்ற ஆதங்கம்தான் ஏற்படுகிறது. ஜெயக்குமார் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும் இல்லை. இணை ஒருங்கிணைப்பாளரும் இல்லை. சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லை. ஆகவே அவரை கைது செய்வது அ.தி.மு.க.வை எச்சரிப்பதாக எப்படி அமையும்?
 
“மொட்டைத் தலைக்கும்- முழங்காலுக்கும் முடிச்சுப் போடும்” இந்த வியூகத்தை ஏன் அவர் முன் எடுக்கிறார்? ஒருவேளை “சூப்பர் ஸ்போக்ஸ்பர்சனாக” இருந்த ஜெயக்குமாருக்கு அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராகவோ- இணை ஒருங்கிணைப்பாளராகவோ ஆகவேண்டும் என்ற ஆசை வந்திருக்குமேயானால் அதை வைத்து அ.தி.மு.க.விற்குள் கச்சேரி நடத்திக் கொள்ளட்டும்.
 
“தர்ம யுத்தம்” நடத்திவிட்டு இணைந்தவர்- இணைத்தவர்களிடம் “தர்மம்” கேட்டுப் போராடட்டும். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும்- கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் மீதும் புழுதி வாரி வீசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
 
கள்ள ஓட்டுப் போடுவதைக் கலையாக வைத்து- முதன் முதலில் “சைதாப்பேட்டை” “கும்மிடிப்பூண்டி” கள்ள ஓட்டுப் பார்முலாவை தேர்தலில் புகுத்தி ஜனநாயக தேர்தலைச் சீர்குலைத்த அ.தி.மு.க ஆட்சியின் இருண்ட காலங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் எத்தகையைக் கீழ்த்தரமான கள்ள ஓட்டுத் தந்திரத்தின் விளைவாக நடந்தது என்பதும் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும். ஆனால் நியாயமாக- நேர்மையாகத் தேர்தல் நடைபெற்று- இன்று உள்ளாட்சி அமைப்புகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தினரும்- கூட்டணிக் கட்சியினரும் அமர்ந்திருப்பதைச் சகித்துக் கொள்ள இயலாத ஜெயக்குமார் “தி.மு.க. அரசைப் பார்த்து சகிப்புத்தன்மையற்ற அரசு” என்று கூறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
 
ஜெயக்குமார் எத்தனையோ அவதூறு பேட்டிகளைக் கொடுத்தாலும்- அதற்காக அவர் கைது செய்யப்படவில்லை. அதுவே எங்கள் கழகத் தலைவர் காட்டிய பெருந்தன்மை. ஆனால் முன்னாள் அமைச்சராக இருந்த ஜெயக்குமாரே சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு- "மெயின் ரோட்டில்" அராஜகத்தில் ஈடுபடும்போது- சட்டத்தின் ஆட்சிதான் அவரை கைது செய்ததே தவிர- தி.மு.க.வோ, எங்கள் கழகத் தலைவரோ இல்லை என்பதை அவர் புரிந்துகொள்வது நல்லது.” எனத் தெரிவித்துள்ளார்.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

828 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்: மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!