பாமக தலைவர் பதவியில் விவகாரத்தில் நான் முடிவு எடுத்தது எடுத்ததுதான் என்றும், இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த என்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் என்றும் டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக தலைவராக இருந்த அன்புமணியை நீக்கிவிட்டு, இனிமேல் நானே தலைவர் என டாக்டர் ராமதாஸ் அறிவித்த நிலையில், பாமக வட்டாரத்தில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வரும் நிலையில், ராமதாஸ் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், அவரை சமாதானப்படுத்த அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும், இது குறித்த பேச்சுவார்த்தைகள் எந்தவித பலனும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நான் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை; நான் முடிவு எடுத்தது, எடுத்ததுதான். பாமக தலைமை விவகாரம் குறித்து என்னை யாரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வர வேண்டாம்," என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்ததாகவும் கட்சி வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.