கூகுள்பே, போன் பே போன்ற யுபிஐ பண பரிவர்த்தனை முறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக, நாடு முழுவதும் பயனர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
“பணம் எடுத்துச் செல்லத் தேவையில்லை, கைபேசி இருந்தாலே போதும்” என்று நம்பிக்கையுடன் வெளியே சென்றவர்களுக்கு இன்று எதிர்பாராத அவலமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, இன்று முற்பகல் முதலே யுபிஐ பரிவர்த்தனைகள் நிறைவேறாமல் தடைபட்டு வருகின்றன. இந்த பிரச்சனைக்கு காரணம் தொழில்நுட்பக் கோளாறாகும் என்று இந்திய தேசிய பணப்பரிவர்த்தனை நிறுவனம் (NPCI) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் NPCI வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட சிக்கலால், பல யுபிஐ பரிவர்த்தனைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சிக்கலை விரைவில் சரி செய்யும் பணிகளில் எங்கள் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இச்சேவையுடன் ஏற்பட்ட தாமதத்திற்காக வருந்துகிறோம்” என கூறப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, பல பயனர்கள் மிகவும் குறைந்த தொகையைக் கூட மற்றொருவருக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிலருக்கு, பணம் அனுப்பும் போது “வங்கி நெட்வொர்க் செயலிழந்துள்ளது” எனும் செய்தி வந்துள்ளதுடன், மற்றொருவருக்கு “வேறு வங்கிக் கணக்கின் வழியாக முயற்சிக்கவும்” என்ற தகவலும் வந்துள்ளது.
கடந்த மாதத்திலும் இதே போன்ற ஒரு குறுக்கீடு ஏற்பட்டது. இப்போது மீண்டும் வார இறுதி நாளில் இதுபோன்ற தடங்கல் ஏற்பட்டிருப்பது, பொதுமக்கள் மட்டுமல்லாது, வியாபாரிகளையும் பெரிதும் பாதித்துள்ளது. பணப்பரிவர்த்தனையின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழும் சூழல் உருவாகியுள்ளது.