பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் மாறி மாறி வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், இது பாமகவை தங்கள் கூட்டணிக்கு மறைமுகமாக அழைக்கும் செயல் என கருதப்படுகிறது.
இந்த வாழ்த்துச் செய்திகள் மூலம், டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி பிரிவுதான் உண்மையான கட்சி என்பதை இரு தலைவர்களும் மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அன்புமணி ராமதாஸ் பிரிவை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது.
இந்த நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் டாக்டர் ராமதாஸ், அதிமுக அல்லது திமுக கூட்டணிகளில் எந்த கூட்டணிக்குச் செல்வார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவு தமிழக அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அரசியல் வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்து பதிவு இதோ:
முதல்வர் ஸ்டாலின்: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! நீண்ட ஆயுளோடு, தங்களது பொதுவாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென விழைகிறேன்.
எடப்பாடி பழனிசாமி: இன்று பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா டாக்டர். ச. இராமதாசு அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.