இன்று பாமக நிறுவனர் ராமதாஸின் பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபமாக பாமக கட்சியில் நிறுவனர், தலைவர் ராமதாஸுக்கும், அவரது மகனும், செயல் தலைவரான அன்புமணிக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்நிலையில் இன்று ராமதாஸின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இன்று அதையொட்டி தமிழ்நாடு முழுவதும் பாமக சார்பில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அன்புமணி திட்டமிட்டிருந்த நிலையில், கட்சி பெயர், கொடி போன்றவற்றை அன்புமணி பயன்படுத்த தடைக்கோரி ராமதாஸ் மனு அளித்தார். இதனால் இன்று அன்புமணி பயணம் தொடங்குவாரா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
இந்நிலையில் இன்று ராமதாஸின் பிறந்தநாளில் அவர் கலைஞர் கருணாநிதியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் “பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!நீண்ட ஆயுளோடு, தங்களது பொதுவாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென விழைகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைய அன்புமணி ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படும் நிலையில், ராமதாஸுக்கு அதில் விருப்பம் இல்லையென்றும் திமுகவுடன் கூட்டணி அமைக்க அவருக்கு விருப்பம் இருப்பதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் பாமகவுடன் கூட்டணியில் இருந்த பாஜக, அதிமுக தலைவர்கள் வாழ்த்தும் முன்னரே, ஏன் அன்புமணி ராமதாஸே வாழ்த்துவதற்கு முன்னர் முதல் ஆளாக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராமதாஸை வாழ்த்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் ஒருவேளை இருக்குமோ? என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K