தேவைப்பட்டால் கூட்டணி அமைப்போம் என கமல் கூறியதற்கு சம்மதம் தெரிவிக்கும் தோனியில் பதில் கூறியுள்ளார் ரஜினி.
ட்விட்டரில் தமிழக அரசியல் சூழலை விமர்சித்து கருத்து தெரிவித்து வந்த கமல்ஹாசன், மதுரையில் மாநாடு நடத்தி மக்கள் நீதி மய்யத்தை தொடங்கினார். கிராம சபை கூட்டங்களை மக்களிடையே கொண்டு செல்வது, மக்களாட்சி தேர்தலில் போட்டியிட்டது என்று அரசியலில் கவனிக்கத்தக்க விஷயங்களை செய்து மக்கள் நீதி மய்யத்தை நல்ல லெவலுக்கு கொண்டு வந்துள்ளார்.
அதேசமயம் ரஜினி தனது கட்சி பெயரை அறிவிக்காவிட்டாலும் கட்சி தொடங்குவது என்பதில் உறுதியாக இருக்கிறார். இதற்காக முன்பே மாவட்ட அளவிலான நிர்வாகிகளை அழைத்து பேசியுள்ள ரஜினி தக்க சமயத்திற்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. ரஜினி பாஜகவில் இணைவார் என்று பரவலாக நம்பப்பட்டு வந்த நிலையில் ஒரே பேட்டியில் அதற்கும் முற்றுப்புள்ளி வைத்து தனது கட்சி தனியாக செயல்படும் என்று திட்டவட்டமாக அறிவித்தார்.
இந்நிலையில் கமல்ஹாசனின் பிறந்தநாள் மற்றும் திரைத்துறை சேவையை பாராட்டி நடந்த நிகழ்ச்சியில் அரசியல் சார்ந்த பல விஷயங்கள் பேசப்பட்டன. தற்போது கமல்ஹாசன் நானும் ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம். தமிழக மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிப்போம் என்று கூறியுள்ளார்.
இதற்கு ரஜினி தரப்பிலிருந்து எதுவும் பதில் வராத நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் சொல்லி வைத்தாற் போல கமல் சொன்னது போலவே “ தேவைப்பட்டால் தமிழக மக்களுக்காக இருவரும் கூட்டணி அமைப்போம்” என்று கூறியுள்ளார். இதன் மூலம் இரு கட்சிகளும் சட்டமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட வாய்ப்புகள் அதிகம் உள்ளது தெளிவாகியுள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் ஒரு ஆன்மீக முற்போக்கு கூட்டணி அமைய வாய்ப்பிருப்பது உறுதியாகியுள்ளது.