நடிகர் கமல்ஹாசனின் மய்யம் கட்சியிலிருந்து விலகியது தொடர்பாக வழக்கறிஞர் ராஜசேகர் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை சமீபத்தில் தொடங்கினார். அவரது கட்சியின் சார்பில் சென்னை, திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளில் பொதுக்கூட்டங்களும் நடந்தன. இருப்பினும் அவரது கட்சி பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க இணையதளங்கள் மூலம் நேரிலும் கட்சி தொண்டர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்நிலையில், மய்யம் கட்சியில் இருந்து வழக்கறிஞர் ராஜசேகர் என்பவர் திடீரென விலகியுள்ளார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றும், அதனால் அந்த கட்சியில் இருந்து விலகியதாகவும் ராஜசேகர் கூறியதாக செய்தியானது. ஆனால், அது உண்மையில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
மய்யம் சார்பில் சென்னையில் இன்று மாதிரி கிராம சபை நடத்தப்பட்டது. அந்த விழாவில் கலந்து கொண்ட ராஜசேகர் “என்னால் கமல்ஹாசன் அளவுக்கு வேலை செய்ய முடியவில்லை. அவருக்கு ஈடுகொடுத்து ஓட முடியவில்லை. மேலும், என்னுடைய வழக்கறிஞர் பணியும் செய்ய முடியாமல் போனது. எனவே, இதை அவரிடம் தெரிவித்தேன். அவரோ ‘ நீங்க எங்கிருந்தாலும் நம்மாளுதான்.. போய்ட்டு வாங்க’ என வாழ்த்தி அனுப்பினார்” என அவர் விளக்கம் அளித்தார்.
இதிலிருந்து, அதிருப்தியின் காரணமாகவே மய்யம் கட்சியிலிருந்து ராஜசேகர் விலகியதாக வெளியான செய்தி வதந்தி என்பது தெரியவந்துள்ளது.