தமிழகத்தில் ஏப்ரல் 21 வரை ஆங்காங்கே மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழகப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவிவருகிறது. மேலும், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டலத்தில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்றுகள் சந்திக்கும் பகுதி உருவாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஏப்ரல் 15ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் 16 முதல் 21ஆம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
ஏப்ரல் 15, 16, 17, 18, 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை, இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.