புதுச்சேரியில் மீனவர்கள் மீன் பிடிக்கும் போது கிடைத்த ராக்கெட் பாகத்தின் வெடிக்கும் தன்மை கொண்ட பாகம் காணவில்லை என இஸ்ரோ அதிகாரிகள் பகீர் கிளப்பியுள்ளனர்.
புதுச்சேரியில் வம்பாகீரப்பாளையம் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றபோது ஒரு பெரிய பொருள் அவர்களின் வலையில் தட்டுப்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் அந்த பொருளை படகுகளில் வைத்து கரைக்கு எடுத்து வந்தனர்.
அதன் பிறகு தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அது ராக்கெட்டில் உள்ள ஒரு பாகம் என கண்டறிந்தனர். அதாவது ராக்கெட்டை மேலே ஏந்திச்செல்ல பொருத்தப்படும் 5 எரிப்பொருள் உருளைகளில் ஒன்று என தெரியவந்தது.
இந்த உருளைகள் ராக்கெட்டை சில தூரம் மேலே கொண்டு சென்ற சில நேரங்களில் தானாகவே ராக்கெட்டிலிருந்து பிரிந்து கடலுக்குள் விழுந்துவிடும். இதனை Strap on motor என அழைப்பார்கள். இது குறித்த தகவல் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அனுப்பப்பட்டது.
ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து இது குறித்து ஆராய அனுப்பப்பட்ட இஸ்ரோ அதிகாரிகள், பிஎஸ்எல்வி ராக்கெட்டிலிருந்து பிரிந்து கடலுக்குள் விழுந்த Strap on motor என தெரிவித்தனர். மேலும், அதில் இருந்து வெடிக்கும் தன்மை கொண்ட பாகம் ஒன்றை அதிகாரிகள் அகற்றினர்.
ஆனால், அதன் மற்றொரு பாகத்தை காணவில்லை என தெரிவித்தனர். வெடிக்கும் தன்மை கொண்ட பாகம் ஆபத்தானது என்பாதால் யாராவது எடுத்திருந்தால் கொடுத்துவிடுமாறும் எச்சரிக்கை செய்தனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.