தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பாத யாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று, பாளையங்க்கோட்டைக்கு சென்றுள்ளார்.
இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,
இன்றைய காலை 'என் மண் என் மக்கள்' பயணம், வீரம் விளைந்த நெல்லை மண், பாளையங்கோட்டையில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள் மேல் பேரன்பு கொண்ட சொந்தங்களால் சிறப்புற்றது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில், 25 வயதில் ஆயுதம் ஏந்திப் போராடி உயிர் நீத்த வாஞ்சிநாதனும், மகாகவி பாரதியாரும், சுப்புரமணிய சிவாவும், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையும் வாழ்ந்த மண். பாளையங்கோட்டை சிறை அவர்களின் வீர வரலாற்றைச் சொல்லும்.
விவசாயத்துக்குப் பேருதவியாக இருந்த, மகாபாரதத்தில் இடம்பெற்ற மகத்தான நதியான தாமிரபரணி நீர் இன்று குடிக்கத் தகுதி இல்லாத தண்ணீராக மாசுபடிந்திருக்கிறது. ஆனால் திமுக அரசுக்கோ, டாஸ்மாக் தண்ணீர் விற்பனையை எப்படி அதிகப்படுத்தலாம் என்பதில்தான் முழு கவனமும். தென்மண்டலப் பசுமைத் தீர்ப்பாயம் கடிதம் எழுதிக் கண்டிக்கும் நிலையில்தான் ஊழல் திமுக ஆட்சியில் நீர்நிலைகள் இருக்கின்றன.
மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டங்களிலெல்லாம் ஊழல் செய்து, அந்தத் திட்டங்களின் பலன் பொதுமக்களுக்கு முழுமையாகச் சேர விடாமல் செய்கிறது திமுக. தண்ணீர் கொடுக்க, திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கமிஷன் கேட்பதாக மக்கள் முறையிடுகிறார்கள்.
விவசாயிகளின் காவலன் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் ஆட்சியில், நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 67% உயர்ந்து ₹2,183 ஆக உள்ளது. ₹2,200 மதிப்புள்ள ஒரு மூடை யூரியா, ₹245 க்கு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. பிரதம மந்திரி கிஸான் திட்டம், பயிர் காப்பீடு திட்டம், தேசிய விவசாய நலன் திட்டம், பாசன மேம்பாடு, கால்நடை பாதுகாப்புத் திட்டம் என மத்திய அரசு வழங்கிய நிதி பல ஆயிரம் கோடிகள். போலி வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றியதைத் தவிர வேறென்ன செய்தது ஊழல் திமுக?
மோடியின் முகவரி : பாளையங்கோட்டை
அடல் பென்ஷன் திட்டத்தின் மூலம் பயன்பெற்ற திருமதி ஜெய்சித்ரா, முத்ரா கடனுதவி மூலம் தொழில் முனைவோரான திரு மாயாண்டி, சுவநிதி திட்டம் மூலம் பலனடைந்த திரு கோபாலகிருஷ்ணன், பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம் மூலம் பலனடைந்த திரு நாராயணன், செல்வமகள் சேமிப்புத் திட்டம் மூலம் பலனடைந்த திரு மனோகரன். இவர்கள்தான் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களின் முகவரி.
ஊழலிலும், கடன் வாங்குவதிலும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிலும், சாராய விற்பனையிலும்தான் தமிழகம் இன்று நம்பர் ஒன் ஆக இருக்கிறது.
திருநெல்வேலி மேயர் சரவணன், அத்தனை மாநகராட்சிப் பணிகளுக்கும் கமிஷன் கேட்பதாக திமுகவினரே குற்றம் சாட்டுகிறார்கள். கமிஷனில் வாழும் கட்சி வேறு எப்படி இருக்கும். இவர்கள் உட்கட்சிப் பூசலில், திருநெல்வேலி மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.
அத்தனை துறையிலும் ஊழல் செய்தும், கனிம வளங்களைக் கொள்ளையடித்தும், கச்சத் தீவுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதுமாக திமுக இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. வரும் பாராளுமன்றத் தேர்தலில், திமுக கூட்டணி படுதோல்வி அடையப் போவது உறுதி. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களின் நல்லாட்சி மூன்றாவது முறையாக மீண்டும் தொடரும். அதற்கு நெல்லை மக்களும் அந்த நெல்லையப்பனும் துணையிருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.