Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? அரசுக்கு கேள்வி எழுப்பிய டாக்டர் ராமதாஸ்..!

ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? அரசுக்கு கேள்வி எழுப்பிய டாக்டர் ராமதாஸ்..!
, சனி, 19 ஆகஸ்ட் 2023 (16:06 IST)
ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? என தமிழக அரசுக்கு  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தமிழக அரசுப் பள்ளிகளில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றுக்கு நடப்பாண்டில் 10,407 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு இன்னும் செயல்படுத்தப்படவில்லை. அரசே அதிகாரப்பூர்வமாக அறிவித்து பல மாதங்களாகியும் கூட, ஆசிரியர்களை அமர்த்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
 
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என அனைத்துப் பணியிடங்களிலும் ஏராளமானவை காலியாக உள்ளன. அவை அனைத்தும் உடனடியாக நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையிலும், சட்டப்பேரவைக்கு வெளியிலும் முதலமைச்சரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் வாக்குறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசுப் பள்ளிகளுக்கு 10,407 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவித்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், அதற்கான கால அட்டவணையையும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே வெளியிட்டது. ஆனால், அதன்பின் 8 மாதங்களாகியும் இன்னும் ஒரே ஓர் ஆசிரியர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை.
 
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட கால அட்டவணைப்படி, 6553 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதம் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். அவர்களைத் தொடர்ந்து 3,587 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய ஏப்ரல் மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஜூன் மாதத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். மூன்றாம் கட்டமாக 267 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எதுவுமே நடைபெறவில்லை.
 
அதேபோல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்டவற்றுக்கு 4,719 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கைகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி, ஜூலை மாதத்திற்குள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் அனைத்து ஆள்தேர்வு அறிவிக்கைகளும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளியிடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், 23 வட்டாரக் கல்வி அலுவலர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒரே ஒரு அறிவிக்கை மட்டும் தான் வெளியாகியிருக்கிறது. அதற்கான தேர்வும் இன்னும் நடத்தப்படவில்லை.
 
அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து வழங்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் அதன் முதன்மைக் கடமையை செய்வதில் இந்த அளவுக்கு காலம் தாழ்த்துவது ஏன்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பாகவே ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் பணியை தேர்வு வாரியம் நிறைவு செய்திருக்க வேண்டும். ஆனால், வாரியம் அதன் கடமையிலிருந்து விலகியதால் பாடம் கற்றுத் தர போதிய ஆசிரியர்கள் இல்லாமல் அரசு பள்ளிகளின் மாணவர்கள் தவிக்கும் நிலை உருவாகியிருக்கிறது.
 
இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஆகிய பணிகளுக்கு ஏற்கனவே தகுதித் தேர்வு நடத்தப்பட்டிருக்கும் நிலையில், அதனடிப்படையிலேயே தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து அமர்த்தலாமா? அல்லது போட்டித் தேர்வு நடத்தி அதனடிப்படையில் தேர்வு செய்ய வேண்டுமா? என்பதில் ஏற்பட்டுள்ள குழப்பம் தான் இந்த தாமதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதில் எந்த குழப்பமோ, ஐயமோ தேவையில்லை. தகுதித் தேர்வின் அடிப்படையிலேயே இந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
 
ஒரே பணிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வுகள் தேவையில்லை. கடந்த 2013-ஆம் ஆண்டில் பட்டதாரி ஆசிரியர்களும், இடைநிலை ஆசிரியர்களும் தகுதித் தேர்வின் அடிப்படையில் தான் அமர்த்தப்பட்டனர். அப்போது போட்டித் தேர்வு நடத்தப்படவில்லை. 2018-ஆம் ஆண்டில் தான் போட்டித் தேர்வு திணிக்கப் பட்டது. ஆனாலும் கூட இன்று வரை அந்தப் போட்டித் தேர்வு நடத்தப்படவில்லை. இன்றைய முதல்வர், நான் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அந்தத் தேர்வை கடுமையாக எதிர்த்தோம். தேவையின்றி முந்தைய ஆட்சியில் திணிக்கப்பட்ட போட்டித் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தாலே அனைத்து சிக்கல்களும் தீர்ந்து விடும். அதை செய்ய தமிழக அரசு மறுக்கிறது.
 
போட்டித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த மே மாதம் 9ஆம் நாள் முதல் ஐந்து நாட்களாக சென்னையில் உண்ணாநிலை போராட்டம் நடத்திய, தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் பேச்சு நடத்திய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள், இந்த சிக்கலில் அடுத்த ஒரு வாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால், அதன்பின் 100 நாட்கள் நிறைவடையவிருக்கும் நிலையில் தமிழக அரசு எந்த கொள்கை முடிவு எடுக்காதது நியாயம் அல்ல.
 
இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் இனி தகுதித் தேர்வில் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற கொள்கை முடிவை தமிழக அரசு எடுத்து அறிவிக்க வேண்டும். அதனடிப்படையில் ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை உடனே வெளியிட வேண்டும். இவ்வாறு தனது அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுரையில் மட்டும் நீட் எதிர்ப்பு போராட்டம் தேதி மாற்றம்: திமுக அறிவிப்பு..!