"ரோடு ஷோ" நிகழ்ச்சியில் பங்கேற்க கோவை வந்த பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சுற்றும் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி கோவையில் பாஜக சார்பில் "ரோடு ஷோ" நிகழ்ச்சி இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக கர்நாடகாவின் சிவமொக்காவில் இருந்து விமான மூலம் இன்று மாலை 5.30 மணிக்கு பிரதமர் மோடி கோவை வந்து அடைந்தார்.
விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக செல்லும் பிரதமர் மோடி, கோவை சாய்பாபா காலனியில் உள்ள சாய்பாபா கோயில் சிக்னல் பகுதியில் இருந்து வாகனப் பேரணியை தொடங்குகிறார்.
அங்கிருந்து கங்கா மருத்துவமனை, வடகோவை, அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகம், சிந்தாமணி ஆகிய பகுதிகளின் வழியாக சுமார் 2.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகன பேரணியாக வந்து ஆர்.எஸ்.புரம் பகுதியில் நிறைவடைகிறது. பேரணியின் நிறைவாக மத்திய அரசு திட்டங்கள் மூலம் பயனடைந்தவர்களையும் பிரதமர் மோடி சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமரின் வாகனப் பேரணி நடைபெறும் வழித்தடத்தில் சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பாஜக கொடிகள் நடப்பட்டுள்ளன. பிரதமரின் வருகையை ஒட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருவதால் கோவை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது
மேலும் வாகன பேரணி தொடங்கும் இடத்தில் இருந்து பேரணி முடியும் இடம் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதையொட்டி 5,000-க்கும் மேற்பட்ட போலீசார் கோவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
வாகனப் பேரணியை நிறைவு செய்யும் பிரதமர் இன்றிரவு கோவை சர்க்யூட் ஹவுஸில் தங்குகிறார். பின்னர் நாளை காலை கேரளா புறப்பட்டுச் செல்கிறார். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் பிரதமரின் கோவை வருகை பாரதிய ஜனதா கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.