கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தையை கடத்துவதற்காக நுழைந்துள்ளதாக வாட்ஸ் ஆப் மூலம் தகவல் வந்துள்ளதாகவும் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் கூறினார்.
இது குரல் பதிவுகளாக பரவி வருகிறது எனவும் கோவை மாவட்ட காவல்துறை சார்பில் இதனை 100% முழுக்க முழுக்க வதந்தி என கூற முடியும் என்றும் இதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறியதுடன் வட மாநிலத்தில் இருந்து கோவையில் நிறைய பேர் தொழில் நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள் எனும் சூழலில் இது வட மாநிலத்தவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே மனஸ்தாபம் உருவாக்கும் விதத்தில் பரப்பப்படுகிறது என்பதால் மக்கள் இதனை யாரும் நம்ப வேண்டாம் எனவும் வலியுறுத்தினார்.
மேலும் இது தொடர்பாக எந்த விதமான தகவலும் காவல்துறைக்கு வரவில்லை என்றும் இந்த தகவலை யார் பதிவிட்டார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டார்.
இதை யார் பரப்பினார்களோ அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடந்த ஐந்து ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் குழந்தை கடத்தல் தொடர்பாக எந்த வழக்கும் பதிவாகவில்லை என்றும் தெரிவித்தார்.
கோவை கண்ணம்பாளையம் பகுதியில் நடைபெற்றதாக வீடியோ பரவுவதாகவும் அது வேறு ஏதோ ஒரு பகுதியில் வேறு ஏதோ ஒரு சம்பவத்திற்காக நடந்த வீடியோவை இதுபோன்று பரப்பி வருகின்றனர் என்றும் பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் காவல்துறை கடுப்பாட்டு அறைக்கோ அல்லது வாட்ஸ்சாப் எண்ணுக்கோ அழைத்தால் அனைத்து சந்தேகங்களும் தீர்க்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் குழந்தை கடத்தல் ஈடுபட்டவர்கள் பிடிபட்டதாகவும் அதேபோன்று மேட்டுப்பாளையத்தில் 18 பேர் வந்திருக்கிறார்கள் என்றும் குரல் பதிவுகள் வாட்ஸ் அப் மூலம் பரப்பப்பட்டு வருவது முற்றிலும் தவறானது பொதுமக்கள் யாரும் இதனை நம்ப வேண்டாம் என்றும் கூறினார்.
மேலும் பாராளுமன்ற தேர்தலை ஒட்டி பதட்டமான பகுதிகளை ஆய்வு செய்யும் பணி துவங்கி உள்ளதாகவும் முடிந்த பிறகு முழுமையாக அதுகுறித்து தெரிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். கோவை மாவட்டத்தை பொருத்தவரை தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கூல் லிப் போன்றவை தொடர்ந்து பர்மிதா செய்யப்பட்டு வருவதாகவும் கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை போதைப் பொருட்கள் புழக்கம் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.