நடிகர் விஜயகாந்தால் துவங்கப்பட்டது தேசிய திராவிட முன்னேற்ற கழகம். விஜயகாந்த் இருந்தவரை தேமுதிக உயிர்ப்போடு இருந்தது. அவரின் மறைவுக்கு பின் தேமுதிகவின் வாக்கு வங்கிகள் சரிந்து போனது. விஜயகாந்த் இருந்தபோது தனித்துப் போட்டியிடுவது, அதிமுகவுடன் கூட்டணி, மக்கள் நல கூட்டணி என மாறி மாறி தேமுதிக பயணித்தது. ஆனால் படிப்படியாக தேமுதிகவின் வாக்கு வங்கிகள் சரிய துவங்கியது. விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் போனதால் தேமுதிக வாக்கு வங்கி 2 சதவீதத்திற்கும் கீழே போனது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக பங்குபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இருந்தது. ஆனால் தற்போது 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அந்த கூட்டணியில் தேமுதிக இதுவரை இணையவில்லை. நேற்று பிரதமர் மோடி தலைமையில் மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பிரேமலதா பங்கேற்கவில்லை.
கூட்டணி குறித்து திமுக, அதிமுக என இரண்டு தரப்பிலும் மாறி மாறி பிரேமலதா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. அதில் திமுக சிங்கிள் டிஜிட்டிலும், அதிமுக டபுள் டிஜிட்டலும் தொகுதிகளை கொடுக்க முன் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இவ்வளவு தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் என்பதில் பிரேமலதா உறுதியாக இருக்கிறாராம்.
இந்நிலையில், கூட்டணி பற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் சொன்ன பிரேமலதா தேமுதிக என்னுடைய பிள்ளை ..அதை எங்கு கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு ஒரு அம்மாவாக எனக்கு தெரியும்.. உரிய நேரத்தில் முடிவெடுத்து தக்க சமயத்தில் அறிவிப்போம் என கூறியிருக்கிறார்.