Publish Date: Fri, 17 Apr 2026 (21:34 IST)
Updated Date: Fri, 17 Apr 2026 (21:53 IST)
தேமுதிக எப்போது அதிமுக போன்ற கட்சியுடன் கூட்டணி வைக்க துவங்கியதோ அப்போது முதலே பலமான பேரத்தை நடத்திய பிறகுதான் கூட்டணியில் இணைகிறது. 2021 சட்டமன்ற தேர்தலிலும், 2024 பாராளுமன்ற தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிக இருந்தது. 2024 பாராளுமன்ற தேர்தலின் போது தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக்கொண்டார். ஆனால், சீட் கொடுக்கப்படவில்லை.
பழனிச்சாமி ராஜ்ய சபா சீட் கொடுக்காத கோபத்தில் இருந்த பிரேமலதா இந்த முறை திமுகவுடன் கூட்டணி வைத்தார். அது மட்டும் காரணம் இல்லை.. 10 தொகுதிகள் மற்றும் ராஜ்யசபா சீட் என்கிற பிரேமலதாவின் டிமாண்டை பழனிச்சாமி ஏற்கவில்லை. ஆனால் திமுக அதற்கு ஒப்புக்கொண்டது. அதனால்தான் அந்த பக்கம் போனார் பிரேமலதா..
இந்நிலையில்தான், சமீபத்தில் நடந்த ஒரு திமுக பொதுக்கூட்டத்தில் மேடையில் முதல்வர் ஸ்டாலின் இருக்கும் போதே தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் அதிகமாக இருக்கிறது.. போதை கலாச்சாரம் அதிக அளவில் இருக்கிறது.. அது மட்டும் தான் தமிழகத்தில் பிரச்சனை.. வேறு எந்த பிரச்சினையும் இல்லை என்ற பிரேமலதா பேசியது சர்ச்சையை கிளப்பியது.
திமுகவில் இருக்கும் கூட்டணி கட்சி தலைவரே இதை ஒப்புக்கொண்டார் என அதிமுகவினரும், பாஜகவினரும் ட்ரோல் செய்தார்கள். இந்நிலையில், இதுபற்றி விளக்கம் அளித்துள்ள பிரேமலதா நான் பேசியது வேறு.. ஆனால் ஏதோ திமுகவை குறை சொன்னது போல சித்தரிக்கிறார்கள்.. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பது திமுக ஆட்சிதான் என்று சொல்லியிருக்கிறார்.