தமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கியுள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் தை-1 ல் கொண்டாடப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் சில பொருட்களும் சேர்த்து வழங்கப்பட உள்ளது. இதற்காக அரசு ரூ.249 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தொகுப்புடன் இலவச வேட்டி, சேலையும் வழங்கப்படுகின்றன.
இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வரும் ஜனவரி 9ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ள நிலையில் மக்கள் ரேசன் கடைகளில் கூடி கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக டோக்கன் விநியோகிக்கும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது. எந்த தேதியில் எந்த நேரத்தில் வர வேண்டும் என டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இன்று ரேசன் பணியாளர்கள் வீடு வீடாக சென்று டோக்கன்களை வழங்கும் பணியை தொடங்கியுள்ளனர்.
Edit by Prasanth.K