Publish Date: Wed, 25 Mar 2020 (12:46 IST)
Updated Date: Wed, 25 Mar 2020 (12:49 IST)
சென்னையில் ஊரடங்கை மதிக்காமல் ஊர் சுற்றிய பயணிகளிடம் காவலர் கையெடுத்து கும்பிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் நேற்று மாலை முதல் ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ளது. மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
மக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் மக்கள் பலர் கொரோனா குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள் பலர் பைக்கில் ஆளில்லாத ரோட்டில் ரேஸ் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மக்கள் சாலைகளில் நடமாடுவதை தவிர்க்க காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை அண்ணாசாலையில் வண்டிகளில் பயணித்தவர்களை தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரசீத் கை எடுத்து கும்பிட்டு, தயவு செய்து தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வராதீர்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.