Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டும்.. அண்ணாமலை விமர்சனம்..!

Advertiesment
வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டும்.. அண்ணாமலை விமர்சனம்..!

Mahendran

, சனி, 15 மார்ச் 2025 (16:09 IST)
இன்று வேளாண் பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில் அதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  கூறுகையில்  வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டுமாக ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது திமுக அரசு  என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டுமாக ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது திமுக அரசு. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். திமுகவின் பட்ஜெட் மொத்தமுமே பொய்களும் புரட்டுகளுமாகத்தான் இருக்கிறது. இந்தப் பொய்களைப் பொது இடங்களில் ஒளிபரப்பினால், மக்கள் வந்து பார்ப்பார்கள் என்று யார் இவர்களிடத்தில் கூறினார்கள் என்று தெரியவில்லை. இரண்டு நாட்களாக, மக்கள் வரிப்பணத்தை வீணடித்ததுதான் மிச்சம். 
 
கடந்த ஆண்டு வெளியிட்ட வேளாண் பட்ஜெட்டில், 2022 - 2023 ஆம் ஆண்டில், தமிழகத்தில் மொத்த சாகுபடிப் பரப்பு, 155 லட்சம் ஏக்கர் என்று கூறியிருந்தார்கள். இந்த ஆண்டு பட்ஜெட்டில், அது, 151 லட்சம் ஏக்கராக உள்ளது என்று கூறியிருக்கிறார்கள். சாகுபடிப் பரப்பு, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 லட்சம் ஏக்கர் குறைந்திருக்கிறது என்பது தான் உண்மை. ஆனால், அதை மறைக்க, நான்கு ஆண்டுகளுக்கு முன்புள்ள 2019 – 2020 சாகுபடிப் பரப்பை விட இந்த ஆண்டு உயர்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஏன்? தமிழக மக்களை எத்தனை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது திமுக?
 
பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று கடந்த பிப்ரவரி மாதம் நாங்கள் கூறியபோது, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. பெரியகருப்பன் வந்து அம்புலிமாமா கதைகளைக் கூறிச் சென்றார். இன்றைய வேளாண் பட்ஜெட்டில், பயிர்க்கடன் ரூ.1,774 கோடி இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வெறும் பொய்யிலும் புரட்டிலும் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. திமுக அமைச்சர்களுக்கு, இப்படிக் கூசாமல் பொய் சொல்ல வெட்கமாகவே இருக்காதா?
 
நெல்லுக்கு ரூ.2,500, கரும்புக்கு ரூ.4,000 குறைந்தபட்ச ஆதார விலை என்ற வாக்குறுதி எல்லாம் வெறும் பேச்சளவிலேயே போய்விட்டது. விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சித்து வருவதையே வேலையாக வைத்திருக்கும் திமுக அரசின் இந்த வேளாண் பட்ஜெட், வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்விற்கு விண்ணபிக்க கடைசி தேதி: அரசுத் தேர்வுகள் இயக்ககம்