போலீஸ் அதிகாரிகள் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெரும்பாலும் வேலை அழுத்தம் காரணமாக அப்படி நடப்பதுண்டு. சில சமயங்களில் அது சொந்த காரணங்களுக்காகவும் நடப்பதுண்டு. இந்நிலையில்தான் வேலூரில் காவல்துறை அதிகாரி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வேலூர் கஸ்பா வசந்தபுரம் பொன்னி நகரில் வசித்து வந்தவர் வேல்முருகன். வயது 39. இவருக்கு ஆசா என்கிற மனைவியும் சர்வேஷ்(11) சாத்விக்(8) என்கிற இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். வேல்முருகன் வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை செய்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கி மாற்றுத்திறனாளியாக மாறினார். அதன்பின் கஸ்பாவில் உள்ள புறக்காவல் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் அவர் ஈடுபட்டிருந்தார்.
விபத்து ஏற்பட்டதிலிருந்து அவர் சரியாக நடக்க முடியாமலும், தூங்க முடியாமலும் கஷ்டப்பட்டு வந்தார். இதில் அவர் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் பணி முடித்துவிட்டு தனது மூன்று சக்கர வாகனத்தில் அவர் வசந்தபுரம் சுடுகாட்டு பகுதிக்கு வந்து அங்கு தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி அவர் தீ வைத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதில் உடல் முழுவதும் கருகி அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
வேல்முருகன் வீட்டுக்கு வராததால் அவரது குடும்பத்தினர் அவரை தேடி வந்தனர். அப்போதுதான் வசந்தபுரம் சுடுகாட்டில் இறந்த நிலையில் ஒரு பிணம் கிடப்பதாக செய்தி கேள்விப்பட்டு அங்கே சென்று பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அந்த இடத்திற்கு சென்று அது வேல்முருகன்தான் என்பதை உறுதி செய்தனர். அதன்பின் அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அன்று அவரின் பிறந்தநாள். மது அருந்திய வேல்முருகன் சுடுகாட்டுக்கு சென்று தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். வேறேனும் காரணம் இருக்கிறதா என வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம் என்று போலீசார் கூறி வருகிறார்கள்.