ஈரோட்டில் கொத்து பரோட்டா தரவில்லை என ஓட்டல் உரிமையாளரை தாக்கிய சம்பவத்தில் காவலர் ஒருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு வில்லசரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் அப்பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு இரவு 11 மணி அளவில் இருவர் சாப்பிட வந்துள்ளனர். அவர்கள் கொத்து பரோட்டா வேண்டும் என கேட்டுள்ளனர்.
ஆனால் கடை மூடும் நேரம் ஆகிவிட்டதால் கொத்து பரோட்டா செய்ய முடியாது என கடை மாஸ்டர் மறுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக வந்த இருவரும் உணவக முதலாளி ஈஸ்வரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் எங்களுக்கே பரோட்டா இல்லை என சொல்வியா? நாங்கள் யார் தெரியுமா? என மிரட்டியதுடன், ஆயுதப்படை காவலரான உமர்பாரூக் என்பவருக்கு செல்போனில் அழைத்துள்ளனர். அவர் மேலும் ஒரு நபரை அழைத்து வந்து உணவக உரிமையாளரை தாக்கியுள்ளார். இதனால் ஈஸ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை, காவலர் உமர்பாரூக் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்துள்ளது. கொத்து பரோட்டாவால் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.