நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ. ஜாகிர் உசேன் நேற்று அதிகாலை மசூதியில் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
ஜாகிர் உசேன் ஏற்கனவே ஒரு கொலைக்குழு தன்னை சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறது என்றும், காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வெளியான நிலையில், காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் மெத்தனமாக இருந்த திருநெல்வேலி டவுன் உதவி கமிஷனர் செந்தில்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜாகிர் உசேன் கொலை தொடர்பாக முகமது தவ்பிக் என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் பதுக்கி இருக்கும் இடம் குறித்த தகவல் தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் சுற்றி வளைத்தபோது, அவர் தப்பிக்க முயன்றார். அந்த நேரத்தில், போலீசாரின் துப்பாக்கியால் சுட்டு அவரை பிடித்து கைது செய்தனர்.