பெண்களுக்கு மாதந்தோறும் மகளிர் உதவி தொகை வழங்குவது போல, ஆண்களுக்கு மாதந்தோறும் இரண்டு புல் மது பாட்டில் வழங்க வேண்டும் என்று கர்நாடக மாநில சட்டமன்றத்தில் எம்எல்ஏ ஒருவர் கோரிக்கை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட் மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. அப்போது, ஜனதா தள கட்சியின் எம்எல்ஏ கிருஷ்ணப்பா சபையில் பேசிய போது, "கடந்த ஒரு ஆண்டில் மட்டும் கலால் வரி மூன்று முறை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இந்த நிலையில், மீண்டும் கலால் வரியை உயர்த்தினால், அரசால் 40 ஆயிரம் கோடி இலக்கை எட்ட முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "மக்கள் குடிப்பதை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது. குறிப்பாக உழைக்கும் வர்க்கத்தினரை தடுத்து நிறுத்த முடியாது. எனவே, மகளிருக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை, இலவச பஸ் பயணம் ஆகிய திட்டங்களை வழங்கி வரும் அரசு, ஆண்களுக்கும் வாரத்துக்கு இரண்டு மது பாட்டில்கள் வழங்கட்டும்" என்று குறிப்பிட்டார். ஆண்களுக்கு மாதந்தோறும் பணத்தை வேறு எந்த வழியில் வழங்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அவரது பேச்சுக்கு எம்எல்ஏக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், எரிசக்தி துறை அமைச்சர் ஜார்ஜ், "நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு அதை செய்யுங்கள்" என்று பதிலளித்தார்.