துணை முதல்வர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் பிக்பாக்கெட் ஆசாமிகள் கைவரிசை காட்டியதை அடுத்து, பல திமுகவினர் பணத்தை இழந்ததாக கூறப்படுவது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் நேற்று முன்தினம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதனை அடுத்து திமுக நிர்வாகிகள் பலரும் அவருக்கு பொன்னாடை போர்த்தவும், புத்தகங்கள் வழங்கவும் முண்டியடித்தனர்.
அப்போது, கட்சியினரோடு பிக்பாக்கெட் ஆசாமிகளும் இருந்ததாகவும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதை கண்காணிக்க தவறியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில திமுக நிர்வாகிகளின் பணம் மற்றும் பர்ஸ்கள் திருடப்பட்டதாக தெரிகிறது.
இந்த சம்பவத்தின் மூலம், திமுக நிர்வாகிகள் சுமார் 57 ஆயிரம் ரூபாயை இழந்ததாக கூறப்படுகிறது. பணத்தை திருடியவர்கள் என்று சந்தேகப்பட்ட இருவரை பிடித்து, தர்ம அடி கொடுத்ததோடு காவல் நிலையத்தில் திமுக நிர்வாகிகள் ஒப்படைத்ததாகவும், அவர்களது மொபைல் போனும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
போலீசார் விசாரணையில், பிடிபட்ட இருவரில் ஒருவர் மட்டுமே குற்றவாளி என்றும், இன்னொருவர் அப்பாவி என்றும் தெரியவந்தது. இதனை அடுத்து, பிக்பாக்கெட் ஆசாமியிடம் இருந்து பணத்தை உடனுக்குடன் கைப்பற்றி, பறிகொடுத்த நபர்களிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.
ஒரே ஒரு நிர்வாகியிடம் இருந்து மட்டும் ரூ.17,500 திருடப்பட்டுள்ளது என விசாரணையில் தெரியவந்தது. மேலும் சில பிக்பாக்கெட் ஆசாமிகள் இந்த கூட்டத்தில் கலந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.