தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், திமுக நிர்வாகிகள் திடீரென மோதிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களின் பெயரை வாசித்து கொண்டிருக்கும் போது, பேரூர் நகர செயலாளர் சேகர் என்பவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
இதனால் அவர் ஆத்திரமடைந்ததாகவும், இதனால் மஜித் என்பவருக்கும் சேகருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பரபரப்பு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து, மற்ற திமுக நிர்வாகிகள் இருவரையும் சமாதானப்படுத்திய தாக கூறப்படுகிறது.
பொது இடத்தில், பலர் கூடிய இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுக நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் மோதிக்கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெயரை வாசித்த மஜித் என்பவர், தனக்கு பிடிக்காதவர்களின் பெயரை சொல்வதில்லை என்று குற்றம் சாட்டி வரும் நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை கழகத்திற்கு புகார் அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.