நடிகர் கருணாஸ் தன்மீதுள்ள குற்றசாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக இன்று செய்தியாளர்களை சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.
நடிகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரான கருணாஸ் கடந்த 16-ந்தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில் தமிழகக் காவல்துறை மற்றும் குறிப்பிட்ட தனியார் ஊடகங்கள் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சாதிரீதியாகத் தாக்கி பல கருத்துகளைக் கூறினார். அவரின் இந்த பேச்சின் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சைகளை உருவாக்கியது.
அந்த காணொளியை ஆதாரமாகக் கொண்டு நுங்கம்பாக்கம் போலீஸார் கருணாஸின் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. அதனால் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் கருணாஸ் தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்பட்டது.
இதனையடுத்து இன்று சாலிகிராமத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கருணாஸ் ’தான் தலைமறைவாகவில்லை என்றும் சாலிகிராமத்தில் உள்ள தன் வீட்டில்தான் இருப்பதாகவும் தெரிவித்தார்’.
மேலும் அவர் கூறுகையில்- ’முக்குலத்தோர் புலிப்படை இளைஞர்கள் மீது போலீஸார் வேண்டுமென்றே பொய்வழக்குப் போட்டு தாக்குகின்றனர். அதனாலதான் தவறு செய்யும் காவல்துறையினரை கண்டித்துப் பேசினேன். ஆனாலும் அன்றைய தினம் பலரையும் ஒருமையில் பேசியது தவறுதான். குறிப்பிட்ட சமுகத்தினரை குறித்து பேசியதற்காக ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு எல்லா சமூகத்திலும் நண்பர்கள் உள்ளனர்.’ என்று கூறினார்.
இதற்கிடையில் தங்கள் சமூகத்தை இழிவாகப் பேசிய கருணாஸ் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் கருணாஸ் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கையில் பதாகைகளை ஏந்தியும் கோஷங்களிட்டும் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்துக்கு தொந்தரவு ஏற்படும் என்பதால் போலீஸார் அவர்களை கைது செய்து விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்யாண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.