Publish Date: Fri, 21 Sep 2018 (09:40 IST)
Updated Date: Fri, 21 Sep 2018 (09:46 IST)
முதல்வர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரி குறித்து அவதூறாக விமர்சனம் செய்த கருணாஸ் எம்.எல்.ஏ கைதுக்கு பயந்து தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.
சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கருணாஸ் கோபத்தில் ஆக்ரோஷமாக பேசினார்.
தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தை கடுமையாக விமர்சனம் செய்தார். சட்டையை கழற்றி வைத்து விட்டு வா. ஒத்தைக்கு ஒத்தை மோதிப்பார்ப்போம் என சவால் விட்டார். அதேபோல், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
சசிகலா இல்லையென்றால் இந்த ஆட்சி அமைந்திருக்காது. கூவத்தூர் விடுதியை பரிந்துரை செய்ததே நான்தான். நாங்கதான் கவுண்டரான எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கினோம். கூவத்தூரில் பலரும் தினகரனின் காலில் விழுந்தனர். எடப்பாடி பழனிச்சாமியும் தினகரன் காலில் விழுந்தார். அதை நானே பார்த்தேன். நான் அடித்துவிடுவேன் என முதல்வரே பயப்படுகிறார்.
கொலை செய்தாலும் என்னிடம் சொல்லி விட்டு செய்யுங்கள். காலையில் பல் துலக்குவதற்குள் கொலை யை செய்து விடுவோம். எந்த ஜாதிக்காரனும் மூன்று முறை முதல்வர் ஆகவில்லை. எங்கள் தேவர் இனம்தான் மூன்று முறை முதல்வர் பதவியை வகித்தது என தனது ஜாதியை முன்னிறுத்தி அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதையடுத்து, யாரையேனும் புண்படும்படி பேசியிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகவும், இனிமேல் அப்படி பேசமாட்டேன் எனவும் அவர் கூறியிருந்தார்.
ஆனால், எம்.எல்.ஏ கருணாஸின் மீது சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அவதூறாக பேசுவது, மிரட்டுவது, கலவரத்தை தூண்டுவது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின் மேலும் இரு பிரிவுகள் சேர்த்து மொத்தம் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், கைதுக்கு பயந்து கருணாஸ் தலைமைறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவரை கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கொலை செய்தால் வழக்கு வரும்.. ஜெயிலு வரும்.. ஜெயிலு வந்தா பெயிலும் வரும்.. அத நாங்க கோர்ட்டுல பாத்துக்குவோம் என மேடையில் வீர வசனம் பேசிய கருணாஸ் தற்போது தலைமறைவாகியுள்ளது நகைப்புக்கு உள்ளாகியுள்ளது.