நடிகை நயன்தாரா தனது பேமிலி 9 என்ற நிறுவனத்தின் சார்பில் பெண்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நாப்கின்கள் வழங்கிய நிலையில் நயன்தாரா போல் நாமும் களத்தில் இறங்கி செயல்படுவோம் என்று இயக்குனர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் கூறி இருப்பதாவது:
மாதர் பிரச்சனைகளை மிகப் பெரிய சவாலாக சந்திக்க வேண்டியிருக்கிறது.அதுவும் மாற்று துணி கூட இல்லாமல் அல்லாடும் இதுபோன்ற இடர் காலங்களில்!ஒரு குடும்பத்தையே லகுவாக தாங்கும் அவர்கள் சக்தியிழக்கும் சமயங்களில் அணுசரனையாய் உதவுதல் அவசியமாகிறது.
திருமதி நயன்தாராவும் இன்னும் பலரும் இதை புரிந்துக் கொண்டு நேற்றே செயல்பட்டார்கள். குறிபறிந்து உதவுதலில் ஆணென்ன?பெண்னென்ன?இருபாலுமே ஒரு பெண்ணிடமிருந்து வந்தவர்கள் தானே? இயன்றதை இதயத்துடன் செய்வோம். விமர்சனங்களை மீறி உள்மன நிம்மதி என்ற விமோட்சனம் பெறுவோம்.
Mr ஹரிஹரன் from Student Federation of India போன்ற இளைஞர்கள் தன்னலம் பாராது ஈடுபாட்டுடன் செய்யும் உதவியிலேயே உய்த்திருக்கிறது மனிதம்! இவர்களை ஊக்கப்படுத்தி அடுத்த தலைமுறையையாவது முறையான மக்களாட்சியை (மக்களுக்கு மட்டுமே சேவை செய்யும்) கற்பித்து, மழைநீரோடு கலந்துவிட்ட கழிவுகளை அகற்றி சுத்தமாக்கி பருகுவோம்.