திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் வெளியான விவகாரத்தை தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது தளர்வுகள் காரணமாக அன்றாடம் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வும் அறிவிக்கப்பட்டு நடந்து வருகிறது.
தேர்வுகள் நடந்து வரும் நிலையில் தொடர்ந்து 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் லீக் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாணவர்களின் மதிப்பெண் உள்ளிட்டவை பாதிக்கப்படுமா என்ற அச்சத்தில் பெற்றோர்கள் பலர் உள்ளனர்.
இந்நிலையில் திருப்புதல் தேர்வு குறித்து விளக்கமளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை “மாணவர்களை பொதுத்தேர்வை 3 மணி நேரம் அமர்ந்து எழுத பயிற்சி செய்யும் வகையிலேயே திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அடுத்த மாதம் மேலும் ஒரு திருப்புதல் தேர்வு நடத்தப்பட உள்ளது. திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாது. அதனால் மாணவர்கள், பெற்றோர்கள் பதட்டமடைய வேண்டாம்” என்று கூறியுள்ளது.