அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில் தற்போது ஓபிஎஸ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து இருவரையும் அதிமுக அமைச்சர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் அக்டோபர் 6ம் தேதி சென்னை வர அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் வேட்பாளர் குறித்து அதிமுக தலைமை 7ம் தேதி அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சொந்த ஊரான பெரிய குளத்தில் உள்ள ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் மூன்று நாட்களாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ” தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!” என தெரிவித்துள்ளார்.
இதனால் அதிமுக நலனுக்காக அமைச்சர்களின் சமரச பேச்சுவார்த்தையை ஏற்று ஓபிஎஸ் விட்டுக்கொடுக்க தயராகிவிட்டாரா? என அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.