அதிமுகவின் பெயர் மற்றும் கட்சிக் கொடியை பயன்படுத்துவது குறித்து இபிஎஸ் விடுத்த நோட்டீஸ்க்கு ஓபிஎஸ் பதிலளித்துள்ளார்.
அதிமுகவில் இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல் எழுந்த நிலையில் முன்னதாக நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதாகவும் பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
ஆனால் பொதுக்குழு கூட்டம் செல்லாது என கூறிவரும் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியிலேயே அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார். அவரது காரிலும் அதிமுக கொடி பயன்படுத்தப்படுகிறது. இதற்கு இபிஎஸ் தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக இபிஎஸ், ஓபிஎஸ்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள ஓபிஎஸ் “அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து என்னை நீக்க அடிப்படை உறுப்பினர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. பொதுக்குழுவால் என்னை நீக்க முடியாது. கட்சி தொடங்கப்பட்ட நோக்கத்திற்கு எதிராக இபிஎஸ் செயல்படுகிறார்” என்று பதிலளித்துள்ளார்.