காலில் காலணி அணிந்து காவடி ஆட்டம் ஆடிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காலில் காலணி அணிந்து காவடி ஆட்டம் ஆடுவது போன்ற போட்டோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இந்து மக்களின் தமிழ் கடவுளான முருகனை அவமானப்படுத்தியது கண்டனத்திற்குரியது என பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாஜக முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம், காலணியோடு காவடி எடுக்கிறான். வன்மையாக கண்டிக்கிறோம். தமிழகடவுள் முருகன் பெருமானின் மிகவும் எல்லோரும் பயபக்தியுடன் செய்யும் சடங்கு இது.. அண்ணாமலை கத்துக்குட்டி இப்படி அவமதிப்பு செய்வதை நிறுத்தி கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை காலணியுடன் காவடி எடுத்து கடவுளை அவமான படுத்தியது கண்டனத்துக்கு உரியது என்றும் அதற்காக அவர் முருக பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்மீக ஆதரவாளர் போல் பேசுகின்ற அண்ணாமலை அவர்கள் முருக கடவுளை அவமானப்படுத்துவது போலவும் லட்சக்கணக்கான முருக பக்தர்களின் மனது புண்படுவது போலவும் நடந்து கொண்டு இருப்பது வேதனைக்கு உரியது. விரும்பத் தகாதது என்று தெரிவித்துள்ளார்.