ஒரு வயது குழந்தை ஒன்று இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் அந்த குழந்தைக்கு இறுதிச்சடங்கு செய்ய முற்பட்டபோது திடீரென உயிருடன் எழுந்த சம்பவம் குழந்தையின் பெற்றோர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது
தஞ்சை அருகே வயலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரின் குழந்தைக்கு காய்ச்சல் இருந்ததால் அந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தையை பெற்றோர்கள் கொண்டு சென்றனர். ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை இறந்துவிட்டதாக அறிவித்தார். இதனை அடுத்து சோகத்துடன் சொந்த ஊருக்கு குழந்தையை எடுத்து சென்ற பெற்றோர் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை செய்தனர்
குழந்தையை சவப்பெட்டியில் வைக்கும் போது திடீரென குழந்தை கைகால்களை அசைத்து, கண் விழித்தது. இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மீண்டும் உடனே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் குழந்தை சற்று முன் தான் இறந்ததாகவும் சிறிது நேரத்துக்கு முன்பே கொண்டு வந்து இருந்தால் குழந்தையை காப்பாற்றி இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
அப்படியென்றால் முதலில் பரிசோதனை செய்த மருத்துவர் அலட்சியத்துடன் குழந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன் போராட்டம் செய்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது