உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஓ.பி.எஸ்-ஸின் சகோதரர் பாலமுருகனை மதுரை அப்போலோவிலிருந்து சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு மாற்ற, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராணுவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரை கொடுத்து உதவிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தை செய்தியாளர்களிடம் வெளிப்படையாக ஓ.பி.எஸ் கூறி விட, அந்த விவகாரம் பூதாகரமானது. இதனால் கோபமடைந்த நிர்மலா சீதாராமன் தன்னை சந்திக்க டெல்லி வந்த ஓ.பி.எஸ்-ஐ சந்திக்காமலேயே திருப்பி அனுப்பிய சம்பவமும் நடந்தது.
அதைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் ராணுவ விமானத்தை வாடகைக்கு விடுபவர் என தற்போதும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதுபற்றி நிர்மலா சீதாராமன் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் சாதித்து வந்தார்.
இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அவர் “அவசர நிலை காரணமாகவே ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரருக்கு ராணுவ விமானம் கொடுக்கப்பட்டது. தற்போது கூட இமாச்சலப்பிரதேசத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவ ராணுவ விமானம் அனுப்பப்பட்டுள்ளது. உதவி கேட்பவர்களுக்கு அவசர உதவி வழங்கப்படுவது வழக்கமான ஒன்றுதான்” என அவர் விளக்கம் அளித்தார்.