ஒவ்வொரு ஆண்டும் ஊட்டி, கொடைக்கானலுக்கு தமிழகத்திலிருந்து மட்டுமல்லாது, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் சுற்றுலா பயணமாக வருகின்றனர். குறிப்பாக கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் இந்த பகுதிகள் மிகுந்த நெரிசலை சந்திக்கின்றன. இதில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் மணிக்கணக்கில் மலைச்சாலையில் நகராமல் நிற்கும் சூழல் உருவாகிறது.
இந்த பிரச்சினையை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் இ-பாஸ் முறையை அமல்படுத்த உத்தரவிட்டது. வெளியூரிலிருந்து ஊட்டி, கொடைக்கானல் வரும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டாயமாக இ-பாஸ் பெற வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது.
இந்த ஆண்டு மீண்டும் உயர் நீதிமன்றம் இந்த முறையை தொடர உத்தரவிட்டுள்ளது. வார நாட்களில் 6,000 வாகனங்களும், வார இறுதியில் 8,000 வாகனங்களும் மட்டுமே அனுமதிக்கப்படும்.
மேலும், மாவட்ட நிர்வாகம் இதற்கான கட்டுப்பாடுகளை ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இபாஸ் காரணமாக சுற்றுலா வருகை குறைவதால் வியாபாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.