மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மஹாலின் துணை தொட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மஹால் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருமலை நாயக்கர் மஹால் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், திருமலை நாயக்கர் மன்னரை குறித்து லேசர் லைட்டிங் ஷோ மே மாதம் முதல் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஒலி ஒளி அமைப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதால், தூண்களில் வண்ண பூச்சு பணிகளும் முடிவடைந்துள்ளன.
மஹாலை பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவதைத் தொடர்ந்து, புதுப்பிக்கப்பட்ட பகுதிகளில் யாராவது துணை தொட்டாலோ, எழுதினாலோ, ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், திருமலை நாயக்கர் மஹால் புதுப்பிக்கும் பணி முடிந்தவுடன், நூலகத்தை புதுப்பிக்கும் பணியும் தொடங்கப்படும். மூன்று மாதங்களுக்குள் மஹாலும் நூலகமும் முழுமையாக தயாராகிவிடும் என தகவல் வெளியாகியுள்ளது.