அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று இரவு மீண்டும் டெல்லிக்கு பயணம் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே உள்ள நிலையில் அதிமுகவில் தேர்தல் கூட்டணி குறித்த பரபரப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூட்டணி குறித்து பேசியதாகவும், அதில் சில நிபந்தனைகளை விதித்ததாகவும் கூறப்படுகிறது.
அதேசமயம் அதிமுகவில் ஈபிஎஸ் - செங்கோட்டையன் இடையே சமீபத்தில் கருத்து வேறுபாடு எழுந்தது. பின்னர் அதிமுக முக்கியஸ்தர்கள் அதை சமாதானம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் சமீபத்தில் செங்கோட்டையன் டெல்லி சென்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவருக்கு மத்திய அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதை தொடர்ந்து டெல்லியில் இருந்து வந்த செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசியதாகவும், தற்போது மீண்டும் இன்று டெல்லிக்கு சென்று பாஜக மேலிடத்து முக்கிய புள்ளிகளை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
பாஜகவுடனான கூட்டணிக்கு ஈபிஎஸ் விதித்துள்ள நிபந்தனைகளை தொடர்ந்து செங்கோட்டையனின் டெல்லி சகவாசம் அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் செங்கோட்டையன் அதிமுகவில் திருப்புமுனை ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K