தென் மியான்மர் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய கிழக்கு வங்கக்கடலில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, மியான்மர்-வங்கதேச கடற்கரையை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழ்நாட்டிற்குப் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் நவம்பர் 7ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளுக்கு நவம்பர் 5ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.