காரை பார்க்கிங் செய்ய இடம் இல்லை என்றால், கார் வாங்க அனுமதி கிடையாது என்ற புதிய சட்டம் விரைவில் அமலுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், தெருவில் கார்களை நிறுத்துவது கட்டுப்படுத்தப்படும் என்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சியில், கார் நிறுத்தத்துக்கு இடம் இருந்தால் மட்டுமே புதிய கார் வாங்கும் விதிமுறை விரைவில் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. புதிதாக கார் வாங்குபவர்கள், காரை பதிவு செய்யும் போது, பார்க்கிங் இடம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கான சான்றிதழை கார் வாங்கும் நிறுவனத்திடம் இணைப்பது கட்டாயமாக்கப்படும் என அரசுக்கு போக்குவரத்து துறை பரிந்துரை செய்துள்ளது.
பார்க்கிங் இடமில்லாமல் கார் வாங்கி, அதை சாலை ஓரங்களில் நிறுத்துவதால் பெரும் இடர்வுகள் ஏற்படுகின்றன. இதை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால், இந்த சட்டம் அமலுக்கு வந்தவுடன், சொந்தமாக பார்க்கிங் இடம் உள்ளவர்கள் மட்டுமே கார் வாங்க முடியும். பொதுமக்கள் மத்தியில் இது நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஆனால், அதே நேரத்தில் கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இது ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது.