கரூர் பொதுக்கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பா விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் குழு, கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளது.
கரூரில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து விசாரிக்க, பாஜக எம்.பி. ஹேமா மாலினி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் ஒரு விசாரணை குழுவை அமைத்தன.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்த விசாரணைக்காக தரவுகளை பெற, கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர்கள் விளக்கமளிக்க மறுத்துவிட்டதாக அக்குழு குற்றம் சாட்டியுள்ளது.
பெங்களூரு எம்.பி. தேஜஸ்வி யாதவ் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. ஆகியோரை சந்திக்க நாங்கள் நேரம் கோரினோம். பல வழிகளில் அழைப்பு விடுத்தும் அவர்கள் எங்களை சந்திக்க மறுத்துவிட்டனர்.
எனவே, எங்கள் குழுவில் உள்ள 8 எம்.பி.க்களும் சேர்ந்து ஒரு முடிவை எடுத்துள்ளோம். நாடாளுமன்ற குழுவைச் சந்திக்க மறுத்த கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகிய இருவர் மீதும் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர எங்கள் எம்.பி.க்கள் குழு தீர்மானித்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
அதிகாரிகளின் இந்த ஒத்துழையாமை காரணமாக, அவர்கள் மீது நாடாளுமன்ற நடவடிக்கையின் கீழ் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.