கரூர் அருகே விண்ணில் இருந்து சுமார் 5 கிலோ எடை கொண்ட விழுந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்த சேமங்கி செல்வ நாகரில் வசித்து வருபவர் காத்தான் (52). கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் (22-04-18) இரவு வீட்டின் வாசலில் தனது குடும்பத்துடன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலையில் வானில் பயங்கர சத்தத்துடன் சுமார் 5 கிலோ எடை கொண்ட மர்ம பொருள் வீட்டு வாசல் முன்பு திடீரென்று விழுந்துள்ளது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த காத்தான் மற்றும் அவரது மகள் சியாமளா ஆகியோர் கூச்சலிட்டு கத்தியுள்ளனர். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர். விண்ணில் இருந்து விழுந்த அந்த மர்ம பொருள் கொஞ்சம் தள்ளி விழுந்திருந்தால் காத்தான் மற்றும் அருகில் படுத்திருந்த குழந்தைகள் மீது விழுந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என கூறுகின்றனர்.
இதையடுத்து கிராம நிர்வாக அதுவலர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மர்ம பொருளை கைப்பற்றி சென்றுள்ளனர். இந்த மர்ம பொருள் விண்கலத்தின் உதிரி பாகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது இரும்பு அல்ல என்றும் காப்பர் கலவையிலான ஒரு உலோகம் என கூறப்படுகிறது. இதன் மதிப்பு பெரிய அளவில் இருக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகம் ரகசியமாக வைத்து சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
விண்ணில் இருந்து விழுந்த மர்ம பொருள் ஒன்றரை அடி நீளம் 4 இன்ஞ்சு அகலம் கொண்ட உலோகம் என்றும் இதன் எடை சுமார் 5 கிலோ இருக்கும் என்றும், விண்கலத்தில் இருந்து விழுந்ததா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
மேலும், விழுந்த அந்த மர்ம பொருளை நேற்று இரவு வரை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்க, வருவாய்த்துறையினர் ஒத்துழைப்பு தராத நிலையில், ஒரு சிலர் அந்த புகைப்படங்களை வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் விட்டு விட்டனர்.