ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பில் தொடர்பான எழுவர் விடுதலை குறித்து தமிழக அரசு வற்புறுத்த முடியாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இதனயடுத்து அவர்கள் 7 பேரும் 27 ஆண்டுகள் சிறையில் வாழ்ந்துவிட்டதால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழகத்தை சேர்ந்த பல அமைப்புகள் போராடி வந்தனர்.
இதனை தொடர்ந்து ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான எழுவர் விடுதலைக்கு எதிராக அந்த குண்டுவெடிப்பில் இறந்த காவல்துறையினரின் குடும்பத்தார் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், ஆளுநர் முடிவே இறுதியானது என்று ஆனது.
இந்நிலையில் தமிழக அரசு எழுவர் விடுதலை குறித்து ஆளுநரை வற்புறுத்த வேண்டும் என பல குரல்கள் எழுந்தன. இதற்கு பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், எழுவர் விடுதலை குறித்து தமிழக அரசு அளுநரை வற்புறுத்த முடியாது எனவும், மேலும் இது தொடர்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை எனவும் கூறியுள்ளார்.
தமிழக அரசு எழுவர் விடுதலை விஷயத்தில் அலட்சியம் காட்டுகிறது என்று பல விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், தற்போது ஆளுநரை வற்புறுத்த முடியாது என அமைச்சர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.