இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் ஆகிய இருவரின் வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பு குறித்த இடத்தை யார் தேர்வு செய்தது? என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்காமல் உள்ளது.
மாமல்லபுரத்தை சீன அதிபர் முடிவு செய்ததாகவும், மத்திய அரசுதான் முடிவு செய்ததாகவும், தமிழக அரசு தான் முடிவு செய்ததாகவும் பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில் அமைச்சர் உதயகுமார் இதுகுறித்து கூறியபோது, ‘இந்திய பிரதமரையும் , சீன அதிபரையும் தமிழகத்திற்கு அழைத்து, தமிழன் புகழை உலகறிய செய்தவர் நமது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் அனைவருக்கும் புதியதாக உள்ளது
இன்று மதுரை தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாணவர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் கலந்து கொண்ட வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் மேலும் முதல்வர் குறித்து கூறியதாவது:
தன் தாய் தந்தையர் புண்ணியத்தால் உழவராக, தாய் மண்ணில் பிறந்து உழைப்பால் தாய் தமிழ்நாட்டில் முதல்வராய் உயர்ந்து இன்றைக்கு, மதி நுட்பத்தாலும், அறிவாற்றலாலும் எளிமையாலும், கருணையாலும், நிர்வாகத் திறமையாலும், தொலை நோக்கு திட்டத்தாலும், மக்களின் செல்வாக்கிலும், கவுரவ டாக்டர் பட்டத்தை பெற்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர், சாமனிய முதல்வர், மாணவ சமுதாயத்தின் விடிவெள்ளி, இளைய சமுதாயத்தின் வழிகாட்டி முதல்வர், பாரத பிரதமரையும், சீன அதிபரையும் தமிழகத்திற்கு அழைத்து தமிழன் புகழை உலகறிய செய்த ஓய்வில்லா உழைப்பாளி, அன்பின் அடையாளம் என அடுக்கு மொழியில் பாராட்டியுள்ளார்.