சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் பாதையை நீட்டிக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நிலம் கையகப்படுத்தும் பணிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த புதிய வழித்தடம் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக கிளாம்பாக்கம் வரை செல்வதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தமாக 15.46 கிலோமீட்டர் தூரம் இந்த மெட்ரோ பாதை உருவாக்கப்பட உள்ளது.
இதன் மூலம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை நேரடியாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம். இது பயண நேரத்தை குறைக்கும் முக்கிய முன்னேற்றமாகும்.
மெட்ரோ நிர்வாகம் தயார் செய்த திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை விரிவாக தயார் செய்து மத்திய அரசிடம் அனுப்பி அங்கீகாரம் பெறும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
மேலும், மெட்ரோ பாதைக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மூலம் விரைவில் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.