Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

Advertiesment
Chennai Metro

Siva

, வியாழன், 3 ஏப்ரல் 2025 (17:05 IST)
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
சென்னை  மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மாதவரம் பால்பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் 118.9 கி.மீ. நீளத்திற்கு  மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பாதைகளில் மெட்ரோ ரயில்களை இயக்கும் உரிமையை  தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியுள்ளது. இது சமூகநீதிக்கும், தமிழக இளைஞர்களின் நலனுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
 
இந்த நடவடிக்கையால் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் போக்குவரத்தை இயக்கி, பராமரிக்கும் பணிகளை மேற்கொள்வதற்கான பணியாளர்களை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு பதிலாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனமே தேர்வு செய்து நியமிக்கும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தின் போக்குவரத்தை இயக்கிப் பராமரிக்கும் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமே செய்து வருகிறது. அதனால், அதற்கு தேவையான பணியாளர்கள் தமிழ்நாட்டிலிருந்து மட்டும் தான் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். அந்தப் பணியாளர்களுக்கு தமிழ் மொழியில் பேச, எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, பணியாளர்கள் தேர்வில்  69% இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்ட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழக மக்களின் வேலைவாய்ப்பு உரிமையும், சமூகநீதியும் பாதுகாக்கப்படுகிறது.
 
ஆனால், சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்ட போக்குவரத்தை இயக்கும் பொறுப்பு தில்லி மெட்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குத் தேவையான பணியாளர்களை  இந்தியா முழுவதிலும் இருந்து அந்த நிறுவனம் தேர்வு செய்யும். அதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலை கிடைக்காது. அதுமட்டுமின்றி, இட ஒதுக்கீட்டு முறையில் பின்பற்றப் படாது. இது சமூகநீதிக்கு முற்றிலும் எதிரானது ஆகும். இவை அனைத்துக்கும் மேலாக, தமிழ் தெரியாத பணியாளர்கள் பணியமர்த்தப்படும் போது, அவர்களால் சென்னை மாநகர மக்களுக்கு சரியாக சேவை செய்ய முடியாது. தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். இது தவிர்கப்பட வேண்டும்.
 
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதன்மை பங்குதாரர் தமிழக அரசு தான். தமிழக அரசிடம் கலந்து பேசி இந்த முடிவை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்ததா? அல்லது  தன்னிச்சையாக எடுத்ததா? என்பது தெரியவில்லை. இந்த சிக்கலில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தமிழக நலனுக்கும், சமூகநீதிக்கும் எதிரான இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!