கோவையில் டிவியின் சத்தம் அதிகமாக இருந்ததை கேள்விப்பட்டு தட்டிக்கேட்ட நபர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சுந்தராபுரம் அருகே, செட்டிபாளையம் ரோடு - ஈச்சனாரி சந்திப்பில் அமைந்துள்ள ஒரு கட்டுமானப் பொருள் கடையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த 30 வயதான ஆறுமுகம் கடந்த ஒரு மாதமாக வேலை செய்து வந்தார். வீடுகளுக்கு பொருட்கள் விநியோகிக்கும் மினி லாரி ஓட்டுநராகப் பணியாற்றிய அவர், கேரளத்தைச் சேர்ந்த ஷியாம் என்பவருடன் அங்கிருந்த அறையில் தங்கி வாழ்ந்து வந்தார்.
நேற்று இரவு, இருவரும் மது அருந்திய நிலையில் இருந்தபோது, ஷியாம் டிவியின் சத்தத்தை அதிகமாக வைத்து நிகழ்ச்சியைப் பார்த்ததாக கூறப்படுகிறது. இது தூங்கி கொண்டிருந்த ஆறுமுகத்திற்குத் தொந்தரவாக இருந்ததால், அவர் சத்தத்தை குறைக்க சொல்லி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் வாக்குவிவாதம் முற்றிய நிலையில், திடீரென ஷியாம் அருகிலிருந்த காலி மது பாட்டிலை எடுத்து, ஆறுமுகத்தின் தலை மற்றும் மார்பில் பலமுறை அடித்துள்ளார். திடீர் தாக்குதலில் ஆறுமுகம் மயங்கி விழுந்து விட்டார்.
சத்தம் கேட்டு அண்டை வீட்டார், கடை உரிமையாளர் சத்தியமூர்த்தி மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து சென்றபோது, ஆறுமுகம் உயிருக்கு போராடும் நிலையில் கிடந்தார். இதை பார்த்து, ஷியாம் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
உடனே ஆறுமுகத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணிக்கு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சுந்தராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஷியாமை தேடி வருகின்றனர்.